Wednesday, May 25, 2022

கந்த சஷ்டி கவசம் - அறிந்ததும் அறியாததும்

என்னுடைய வலைத்தளத்தில் வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு பதிவு. என் வலைத்தளம் பொதுவாக ஆங்கிலத்தில் உள்ளதென்றாலும் இந்த மந்திரத்தின் மொழி கருதி இந்தப் பதிவைத் தமிழில் எழுதுகிறேன்.  எந்தப் பதிவையும் உங்களுக்கு வேண்டிய மொழியில் மொழி மாற்றம் செய்து படிக்கும் வசதி என் வலைத்தளத்தில் உள்ளபடியால் மொழி ஒரு பிரச்சனை ஆகாது என்று நம்புகிறேன். இப்போது பதிவுக்குச் செல்லலாம். 


Image Credit - Google



கந்த சஷ்டி கவசம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். பொதுவாக தமிழ் கடவுளான முருகன் மந்திரங்கள் பெரும்பாலும் தமிழிலேயே இருக்கும். அதில் மிக சிறந்த முருகன் ஸ்லோகமே கந்த சஷ்டி கவசம். இதை தினமும் ஒரு முறை சொல்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த கந்த சஷ்டி கவசத்தில் பெரும்பாலோருக்குத் தெரியாத ஒரு விஷயத்தை இந்தப் பதிவில் சொல்ல விரும்புகிறேன். இந்த வரிகள் உங்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். ஒரு முறை கீழ்க்கண்ட வரிகளைப் படிக்கவும். 


"'ஐ'யும் 'கிலி'யும் அடைவுடன் 'சௌ'வும் 

உய்யொளி 'சௌ'வும் உயிர் 'ஐ'யும் 'கிலி'யும் 

'கிலி'யும் 'சௌ'வும் கிளரொளி 'ஐ'யும் 

நிலைபெற்றென்முன் நித்தமும் ஒளிரும் 

ஷண்முகன் நீயும் தனி ஒளி  'ஒள' வும் 

குண்டலியாம் சிவ குகன் தினம் வருக....." 


மேற்கண்ட வரிகள் பாடலின் ஆரம்பத்தில் வரும். 


"பாலன் தேவராயன் பகர்ந்ததை

காலையில் மாலையில் கருத்துடன் நாளும்

ஆசாரத்துடன் அங்கம் துலக்கி 

நேசமுடன் ஒரு நினைவு அதுவாகி 

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்

ஒரு நாள் முப்பத்து ஆறு உருக்கொண்டு....."


மேற்கண்ட வரிகள் பாடலின் முடிவில் வரும். 


பாலன் தேவராயன் (தேவராய ஸ்வாமிகள் இங்கு தன்னை பாலன் என்று தன்னடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறார்) என்பவர் பாடி இருப்பதே கந்த சஷ்டி கவசம் என்பது படித்தவுடன் தெரிந்து விடும். இதில் தெரியாத சூக்ஷ்ம விஷயம் என்னவென்றால், "ஒரு நாள் முப்பது ஆறு முறை" என்று சொல்லி இருப்பார்.  அது என்ன கணக்கு? ஏன் முப்பத்து ஆறு முறை? அங்கு தான் நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் வருகிறது. 


இப்போது மேற்கூறிய முதல் பத்தியைப் படித்தால், அதில் "ஐ", "கிலி", "சௌ" என்ற வார்த்தைகள் வருவதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் முன் பின்னாக மூன்று முறை வரும்.

அதாவது "ஐ" மூன்று முறையும் "கிலி" மூன்று முறையும் "சௌ" மூன்று முறையும் வரும். இங்கே "கிலி" என்பது "பயம்" அன்று. இது சமஸ்க்ரித மூல மந்திரமான  "க்லீம்" என்பதைக் குறிக்கும். அதே போன்று "ஐ"  என்பது "ஐம்" என்னும் மூல மந்திரத்தையும் "சௌ" என்பது "சௌம்" என்னும் மூல மந்திரத்தையும் குறிக்கும். "ஐம்" "க்லீம்" "சௌம்" என்பதாகும். 


இது திரிபுர சுந்தரி தேவியின் மூல மந்திரம் ஆகும். (முருகன் பார்வதியின் மைந்தன் என்பது அனைவரும் அறிந்ததே). இப்போது ஏன் முப்பத்து ஆறு முறை என்ற கணக்குக்கு வருவோம். இந்த ஒவ்வொரு மூல மந்திரமும் மூன்று முறை வருவதால், முப்பத்தி ஆறு முறை படிக்கும் போது ஒவ்வொரு மந்திரத்தையும் நாம் 108 முறை உச்சரிப்போம். 108 முறை என்பது மந்திர உச்சாடனத்தில் ஒரு முக்கியமான எண்ணாகும். 


ஆகவே கந்த சஷ்டி கவசத்தை நாம் முப்பத்தி ஆறு முறை சொன்னால் நம்மை அறியாமல் நாம் தேவியின் மூல மந்திரங்கள் மூன்றையும் தனித் தனியாக 108 முறை உச்சரித்தவர்கள் ஆகிறோம். அது மட்டும் அல்லாது, ஷண்முகனின் தனி மந்திரமான "ஓம்" என்பதே இங்கு "தனியொளி 'ஒள'" என்று கூறப் படுகிறது. தேவியின் மூல மந்திரங்களுடன் இந்த "ஓம்" என்பதும் சேர்த்து உச்சரிக்கப் படும் போது "குண்டலினி சக்தி" என்பது கிளர்ந்து எழுகிறது. இது யோக சாதனையில் ஒரு முக்கியமான அம்சம் ஆகும். 


இப்படி நாம் மந்திரங்களை மேலோட்டமாகப் பார்க்காமல் அதன் உள்ளார்ந்த அர்த்தங்களைத் தெரிந்து கொண்டு படித்தால் பலன் பன்மடங்காகும். எனக்குத் தெரிந்த வரை விளக்கி இருக்கிறேன். படித்து விட்டு உங்கள் மேலான கருத்துக்களைப்  பகிரவும். பதிவைப் படித்தமைக்கு நன்றி.